×

ஒப்பந்தத்தை மீறிய ரஷ்யா!: உக்ரைன் தானிய ஏற்றுமதி துறைமுகத்தின் மீது தாக்குதல்; சரமாரி ஏவுகணைகள் வீச்சு..!!

கீவ்: கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் ஒடேஸா துறைமுகத்தின் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி தொடர்பாக துருக்கி மற்றும் ஐ.நா.வின் பெரும் முயற்சியால் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் அண்மையில் உடன்பாடு ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி, உக்ரைன், ஐ.நா. அதிகாரிகள் மேற்பார்வை இடுவதற்கும் கருங்கடலை கடந்து துருக்கியின் பாஸ்பரஸ் நீரினை வழியாக செல்லும் தானியங்கி கப்பல்களை ஐ.நா., ரஷ்யா, உக்ரைன், துருக்கி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு கண்காணிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. துறைமுகங்கள் மீதோ, சரக்கு கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தாமல் இருக்க ரஷ்யாவும், உக்ரைனும் சம்மதித்தன.

இதனிடையே உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக தானியங்களை கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்யா நேற்று திடீரென அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒடேஸா துறைமுகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

குரூஸ் வகையை சேர்ந்த 6 ஏவுகணைகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்களில் துறைமுகத்தின் சில கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் ஒப்பந்த மீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

The post ஒப்பந்தத்தை மீறிய ரஷ்யா!: உக்ரைன் தானிய ஏற்றுமதி துறைமுகத்தின் மீது தாக்குதல்; சரமாரி ஏவுகணைகள் வீச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,Kiev ,Odesa ,Black Sea ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு